Thursday, October 25, 2012

சட்டை முனி சித்தர் அற்புத வரலாறு



மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்

தியானச் செய்யுள்

சித்த வேட்கை கொண்டு

சிறந்து விளங்கிய சீலரே

அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற

அற்புத மூர்த்தியே

எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய்

ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!


இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்
சட்டைமுனி எனும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர்.சேணிய வகுப்பைச்சார்ந்தவர்.தாய்,ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை விட்டுத் தமிழகம் வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்தக் காரணத்தால் விவசாயம் செய்துபிழைக்க வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்ட காரணத்தால் விவசாயக்கூலி வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின்வாசல்களில் தட்டை ஏந்தி யாசகம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுதுவட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர்விட்டார். முனிவர். ”யாவும் விதியின் வழித்தான் செல்லும். தாய், தந்தையரை காப்பாற்றும் பொருட்டுநீ செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும் மாறும்.சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.” என்றார்.


சட்டைமுனி மன மகிழ்ச்சிக் கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனைஆலயம் சென்று தினம் வணங்கினார். பிச்சைக்காரகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவினார். சட்டை முனிக்கு திருமணமும் நடைப்பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம்நடத்தினார். தினம் கோயில் சென்று சிவனை வழிபடத்  தவறவில்லை. ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டுவெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்துஒரு குரல் வந்தது. ‘ஏன்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதறிட எண்ணமில்லையா? ‘


சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில்வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்’ என்றார். ”உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்றுதாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார். இவரை ‘கயிலாயச் சட்டைமுனி நாயனார்’ என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால் கம்பளிச் சட்டைமுனி என்றும் அழைக்கப்படுகிறார்.. சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்தச் செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து வினவ ‘இதில் ஒன்றும் வியப்பில்லை.இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கோ இது போகப்போக விளங்கும்” என்றார்.


அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்துசித்தர்களின் வழியில் தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார். போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர்,கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து, ஞானநிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார். இவரின் தவத்தால்கயிலாயத்தில் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்...

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.

இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.

சட்டைமுனி இயற்றிய நூல்கள்:

சட்டைமுனி நிகண்டு – 1200

சட்டைமுனி வாதகாவியம் – 1000

சட்டைமுனி சரக்குவைப்பு – 500

சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500

சட்டைமுனி வாகடம் – 200

சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200

சட்டைமுனி கற்பம் – 100

சட்டைமுனி உண்மை விளக்கம் – 51

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.



No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...